புதிதாய் எழுகிறது 'தேசம்'... மாதத்தில் ஒரு நாள் அச்சில், கனடாவிலிருந்து...
இணையத்தில்
தினமும், உலகெங்கும்... அரசியல், சமூகம், வரலாறு, கலை, இலக்கியம் இன்னும் பல விடயங்களைத் தாங்கி....

More

    Latest Posts

    யாழ்ப்பாண பல்கலையின் 38 ஆவது பட்டமளிப்பு விழா ஊடக விவரிப்பு

    யாழ்ப்பாண பல்கலையின் 38 ஆவது பட்டமளிப்பு விழா ஊடக விவரிப்பு
    பு.கஜிந்தன்
    காணொளி இணைப்பு : 
     
     
    யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு மார்ச் 14, 15, 16 ஆம் திகதிகளில் !
    2 ஆயிரத்து 873 பட்டங்கள் : 46 தங்கப் பதக்கங்கள் : 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்கள்!!

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; பங்குனி மாதம் 14ம், 15ம், 16ம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

    இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழாத் தொடர்பான விபரங்களை வழங்கினார்.  அதன் விபரம் வருமாறு :

    பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இம்முறை நடைபெறும் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் பொன்விழா நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக இடம்பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

    38வது பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப்பதக்கங்களையும், புலமைப்பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.

    இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப் பீடம், பொறியியற் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம்,  மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம், இந்துக்கற்கைள் பீடம், சித்தமருத்துவ அலகு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

    இந்தப் பட்டமளிப்பு விழாவில் 441 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து எட்டு உள்வாரி மாணவர்களுக்கும், 330 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 94 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும்  வழங்கப்படவுள்ளன.

    உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 441 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 9 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும், பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 33 பேரும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 36 பேரும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 73 பேரும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 40 பேரும், கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 195 பேரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை 28 பேரும், கல்வியியலில்; பட்டப்பின் தகைமைச் சான்றிதழை (பகுதி நேரம்) 24 பேரும்; பெறவிருக்கின்றனர்.

    மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 29 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சைமாணிப் பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 94 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 20 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 168 பேர் விஞ்ஞானமாணிப்  (பொது) பட்டத்தையும், 24 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 25 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பெறவுள்ளனர்.

    இவர்களுடன் விவசாய பீடத்தைச் சேர்ந்த 96 பேர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்,  பொறியியற் பீடத்தைச் சேர்ந்த 119 பேர் பொறியியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த 97 பேர் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 80 பேர் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

    அத்துடன், முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 276 பேரும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை  7 பேரும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 81 பேரும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர்.

    இவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 398 பேரும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 12 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.

    மேலும், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 பேரும், மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 49 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 60 பேரும் பெறவிருக்கின்றனர்.

    மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 15 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்;, 28 பேர் விஞ்ஞானமாணி (பிரயோககணிதமும் கணிப்பிடலும்) பட்டத்தையும், ஒருவர் விஞ்ஞானமாணி (சூழல் விஞ்ஞானம்) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். வியாபாரக்கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 42 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு  வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 4 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும்;,  16 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும், 5 பேர்  சந்தைப்படுத்தலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 46 பேர் கணக்கியல் மற்றும் நிதியியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 15 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 பேர் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர். மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 66 பேர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.

    இவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 288 பேர் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும், 42 பேர் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும்  பெறவுள்ளனர்.

    மேலும், 3 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், ஒருவர் கணினி விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும், 31 பேர் வங்கியியல் மற்றும் நிதியியலில் தகைமைச் சான்றிதழையும், 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழையும்,  34 பேர் நுண்நிதியியலில் தகைமைச் சான்றிதழையும்,  ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

    மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 46 தங்கப்பதக்கங்களும், 09 புலமைப்பரிசில்களும், 48 பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்    மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப் பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான (Best Performance) பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தினை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    இப்பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 20ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை  பி.ப 3.45 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.

    சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை எக்ஸ்ரர் (Exeter)  பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை கிலியன் ஜுலெவ் (Prof. Gillian Juleff), “Monsoon Steel: Serandib’s Contribution to Global History of Science and Technology” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த  பேராசிரியை ஃபர்ஸானா எஃவ் ஹனிபா (Prof. Farzana F. Haniffa), “Modern Muslim Citizenship in 1940s Ceylon:  Identity, Politics, and Community Aspirations at the Moors Islamic Cultural Home”  என்ற தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர். இந்த நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38வது பொதுப் பட்டமளிப்பு வைபவம்  நிறைவு பெறும்.

    Latest Posts

    spot_imgspot_img

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.